கோவில்கள், சிலைகளை பாதுகாக்க.. உயர்நீதிமன்றத்தின் 75 உத்தரவுகள்..!

0 3945

ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான கோவில்கள், கலைப்  பொருள்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கும், மத்திய தொல்லியல் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் 75 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.  கோவில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதோடு, நில வாடகை பாக்கியை வசூலிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அமர்வு  தீர்ப்பு வழங்கியது. அதில், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்க 8 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

கோவில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பதோடு, நில வாடகை பாக்கியை வசூலிக்க உத்தரவிட்டனர். கோவில்களில் உள்ள சிலைகள், நகைகளின் பட்டியல் தயாரித்தல், கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து சிலைகளை பாதுகாத்தல், அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமித்தல், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்தல், சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து இணைய தளத்தில் பதிவேற்றுதல், கோவிலுக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயித்தல் உள்ளிட்ட உத்தரவுகளை அறநிலையத்துறைக்கு பிறப்பித்துள்ளனர்.

கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிடுவதோடு, கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும், மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும், கோவில்களுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் பாதுகாத்தல், கோவில் நிலங்கள், சொத்துக்களை திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை என்பன உள்ளிட்ட 75  உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்தி, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments