சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து போலீசாரிடம் தரக்குறைவாக பேசி தகராறு செய்த பெண் மீது 6 பிரிவுகளில் வழக்கு

0 42084

சென்னையில் வாகன சோதனையின் போது போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் காவலர்களை மிரட்டிய வீடியோவும் வெளியாகி உள்ளது. 

சென்னை சேத்துபட்டு சிக்னலில் வாகன தணிக்கை மேற்கொண்ட போலீசார், கார் ஒன்றை வழிமறித்து அதிலிருந்த இளம்பெண்ணிடம், பயணத்திற்கான நோக்கம் குறித்து விசாரித்தனர். அந்த பெண் கூறிய பதிலை வைத்து, அவர் அத்தியாவசிய காரணங்களுக்குச் செல்லவில்லை என்பதை உறுதிபடுத்திய போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து,காரை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அந்த இளம்பெண் செல்போன் மூலம் வீட்டுக்கு தகவல் தெரிவிக்கவே, பி.எம்.டபுள்யூ காரில் வந்திறங்கிய இளம்பெண்ணின் தாயார் போலீசாரை சகட்டு மேனிக்கு வசை பாடத் தொடங்கினார்.

முகக்கவசம் அணியுமாறு கண்டிப்புடன் அறிவுறுத்திய போலீசாரை, மரியாதை குறைவாக போடா என திட்டிய அந்த பெண், வாயை மூடு என்றதோடு, தான் யார் என்று தெரியுமா? நான் ஒரு அட்வகேட், உங்க யூனிபாஃர்மை கழற்றிவிடுவேன் என மிரட்டல் விடுத்து அங்கிருந்து ஆவேசத்துடன் புறப்பட்டுச் சென்றார். 

 போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் தனுஜா கத்துலா என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட  6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்தப் பெண் வழக்குரைஞர் ஏற்கனவே இதுபோன்று போலீசாரை அவமரியாதையாக பேசிய வீடியோவும் வெளியாகி உள்ளது.

 இந்த நிலையில் காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவுடனும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 3 பிரிவுகளாக 24 மணி நேரமும் பணியாற்றி வரும் காவல் துறையினருக்கும், ஊரடங்கை அமல்படுத்துவதற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தருமாறு காவல்துறை அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை சேத்பட்டில் ஊரடங்கை மீறியதாக காரை பறிமுதல் செய்ய முயன்ற போலீசாரை ஒருமையில், தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வழக்கறிஞர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.  இந்த நிலையில், வழக்கறிஞரின் மகள் பிரீத்தி ராஜன் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments