ஜூன் 15 முதல் மளிகைப் பொருள் தொகுப்பும்... 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்..! தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இரண்டாம்கட்ட கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை கலைஞர் பிறந்தநாளில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15ம் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பை ஒரே நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதற்காக அதன் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால் முதல் மாத கொள்முதலிலேயே அரசுக்கு 80 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வழக்குகளின் காரணமாக பொது விநியோகத் திட்டத்தில் வழக்கமான விநியோகம் ஒரு வார காலம் தாமதமானதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments