பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து.. முதலமைச்சர் அறிவிப்பு..!
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சி.பி.எஸ்.சி நிர்வாகத்தால் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
மாநில பாடத்திட்டங்களின் கீழ் படிக்கும் மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதா, நடத்துவதா என்பது குறித்து பல்வேறு மாநிலங்களும் ஆலோசித்து முடிவுகளை அறிவித்துவருகின்றன. அந்த வகையில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர், பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர், மருத்துவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
+2 பொதுத்தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வகுப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், ஆயினும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்துத் தரப்பினரும் உறுதியாக இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு, அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும்’ என்றும் முதலமைச்சர் கூறி உள்ளார்.
Comments