கலப்பட விதைகள்.. சின்ன வெங்காயம் போட்டா பெரிய வெங்காயம் விளையுது..! விவசாயிகள் வேதனை

0 14416
கலப்பட விதைகள்.. சின்ன வெங்காயம் போட்டா பெரிய வெங்காயம் விளையுது..! விவசாயிகள் வேதனை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பலநூறுஏக்கர் பரப்பளவில்  நல்ல விலை கிடைக்கும் என்று நம்பி சின்னவெங்காய  விதைகள் பயிரிடப்பட்ட நிலையில் வயலில் பெரியவெங்காயம் விளைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். கலப்பட விதைகளால் கவலை அடைந்துள்ள விவசாயிகளின் கண்ணீர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான வாவிபாளையம், மந்திரிபாளையம், குள்ளம்பாளையம், கெரடபுத்தூர் ஆகியபகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சின்னவெங்காயத்திற்கு அதிகவிலை கிடைப்பதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 250 ஏக்கருக்கு சின்னவெங்காயம் பயிரிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெங்காய சாகுபடி அறுவடைக்கு தயாரான நிலையில் தங்களது விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வெங்காய சாகுபடியில் சின்னவெங்காயத்திற்கு பதிலாக பெரியவெங்காயம் முளைத்திருப்பதை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சின்ன வெங்காயம் பயிரிட்டு ஏமாந்து நொந்து போன விவசாயிகள் கூறுகையில் தற்போது முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சின்ன வெங்காயத்திற்கு மார்க்கெட்டில் கூடுதலாக விலை கிடைக்கும் என்றுநம்பி 250 ஏக்கருக்கும் மேலாக நடவுசெய்ததாகவும், சின்னவெங்காயம் பயிரிடுவதற்கான விதைகளை கள்ளிப்பாளையத்திலுள்ள மகாகணபதி என்ற கடையில் விலை கொடுத்து வாங்கி நடவு செய்ததாகவும், தற்போது அறுவடை காலம் நெருங்கிவிட்ட நிலையில் கூலிகொடுத்து ஆட்களை பணிக்கு அமர்த்தி அறுவடையை துவக்கியபோது சின்னவெங்காயத்திற்கு பதிலாக பெரியவெங்காயம் முளைத்திருப்பதும் சிலரது வயல்களில் சின்னவெங்காயமானது பெரியவெங்காயத்திற்க்கும் சேராமல் சின்னவெங்காயத்திற்கும் சேராமல் நடுத்தர வெங்காயம் ஆகஇருப்பது தங்களுக்கு மிகுந்த மனவேதனையை தருவதாக வேதனை தெரிவித்தனர்.

ஏக்கர் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை மூலதனம் போட்டு வெங்காய அறுவடையில் தற்போது ஈடுபட்டுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றிற்கு சின்னவெங்காயம் நன்றாக விளைந்தால் 10 முதல் 12 டன் வரை மகசூல் கிடைத்து வந்த நிலைமாறி, தற்போது நான்கு டன் மட்டுமே தருவதாகவும் சரியான அளவுடைய சின்ன மற்றும் பெரிய வெங்காயத்திற்கு மார்க்கெட்டில் தட்டுப்பாடு உள்ள நிலையில் தற்போது இரண்டும் இல்லாமல் விளைந்துள்ள சின்னவெங்காயத்தை வாங்க ஆளின்றி கேட்பாரற்றுகிடப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த குரு என்ற நிறுவனத்திடமிருந்து சின்னவெங்காய விதைகளை 1 கிலோ 6000 ரூபாய் கொடுத்து வாங்கி, அதனை சான்று பெற்ற விதை என கூறி கள்ளிபாளையம் கடையில் விற்பனை செய்ததாக கூறப்படுகின்றது. இந்த கலப்பட விதையால் விவசாயிகள் ஒட்டு மொத்தமாக பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக கூறினர்.

பல்லடம் பகுதியில் சின்னவெங்காய சாகுபட செய்து கலப்பட விதையால் ஏமாற்றம் அடைண்ட்துள்ள விவசாயிகளின் நிலங்களில் ஆய்வு நடத்தி கலப்பட விதைகளை கொடுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த குரு நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணத்தை பெற்றுத்தர வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த குரு நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது எழுந்துள்ள இந்த பிரச்சனைக்கு தங்களது நிர்வாகமே பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் வருகிற திங்கட்கிழமை அன்று பல்லடத்திற்கு வந்து சிறிய வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளை சந்தித்து விளைநிலங்களை ஆய்வுசெய்து அவர்களுடன் கலந்துஆலோசித்த பின்னர் நிவாரணம் வழங்குவது குறித்தும்,இழப்பீடு தொகை வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

பொதுவாக வெங்காயத்தை உறித்தால் தான் கண்ணீர்வரும்..! ஆனால் இங்கே வெங்காயத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய விவசாயிகள் அதன் அளவை பார்த்து ஏமாற்றத்துடன் கண்ணீர் சிந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments