தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு.. கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு..!

0 22530
தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒருவாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகளும், சென்னை உள்ளிட்ட எஞ்சிய 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தளர்வற்ற ஊரடங்கு ஜூன் 7 காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், நோய்த்தொற்றின் தன்மையை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், தொற்று பரவாமல் தடுத்து மக்களின் உயிரைக் காக்கும் நோக்கத்திலும் முழு ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் ஜூன் 14 காலை 6 மணி வரை மேலும் ஒருவாரக் காலத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொற்று அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். திறந்த வெளிகளில் மீன் சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 விழுக்காடு டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டுப் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு அளித்ததைப் போலவே சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
இவற்றுடன் கூடுதலாகத் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ பதிவுடன் அனுமதிக்கப்படும். மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற தொழிலாளர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

மின்பொருட்கள் விற்பனைக் கடைகள், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், புத்தகங்கள் எழுதுபொருட்கள் விற்பனைக் கடைகள், வாகனப் பழுது பார்ப்பகங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூவரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இருவரும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய இடங்களுக்கு அவசரக் காரணங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பாஸ் பெற்றுப் பயணிக்க அனுமதிக்கப்படும். கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 10 விழுக்காடு பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படும்.

நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments