கொள்ளையனுக்கு ஊரடங்கை மீறி இறுதி ஊர்வலம்...! ஒரு போலீஸ காணோம்

0 25986
கொள்ளையனுக்கு ஊரடங்கை மீறி இறுதி ஊர்வலம்...! ஒரு போலீஸ காணோம்

திருப்பூரில், வழிப்பறிக் கொள்ளை பணத்தை பங்கு பிரிப்பதில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட  இளைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சமூக இடைவெளியை மறந்து கூட்டாளிகள்  நூற்றுக்கணக்கில் திரண்ட நிலையில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டதாக சர்ச்சை உருவாகியுள்ளது

திருப்பூர் எம்.ஜி.ஆர் காலனியை சேந்தவர் சம்சுதீன், இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. இவர் சம்பவத்தன்று கூட்டாளிகளுக்குள் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.

சம்சுதீன் மீது பல வழக்குகள் இருந்தாலும் உள்ளூர் இளைஞர்களுக்கு உதவிகரமாக இருந்ததால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஊரடங்கை மீறி சம்சுதீனின் ஆதரவாளர்கள் பெரும் அளவில் திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்த அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காவல்துறையினர் எவரையும் காணவில்லை

பிணக்கூறாய்வு முடிந்து சம்சுதீன் சடலம் ஒப்படைக்கப்பட்டதும், ,அந்த பெருங்கூட்டம் அப்படியே இருசக்கர வாகனத்தில் நீண்ட ஊர்வலமாக அமரர் ஊர்தியைப் பின் தொடர்ந்தது. திருப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரே அடங்கி இருக்க , ஊருக்கும் போலீசுக்கும் அடங்காமல் எம்.ஜி.ஆர் காலனி வரை சென்றது அந்த ஊர்வலம்.

அந்த காட்சிகளை வீடியோ எடுத்து அவரது ஆதரவாளர்கள், கொல்லப்பட்ட சம்சுதீனை மாவீரன் போல புகழ்ந்து பின்னணி இசையுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இறுதி ஊர்வலத்தில் அதிக பட்சமாக 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அரசு அனுமதித்துள்ள நிலையில் , சமூக இடைவெளியை மறந்து, விழிப்புணர்வு இல்லாமல் திரண்ட கூட்டத்தை காவல்துறையினர் ஏன் கட்டுப்படுத்தவில்லை ? என்றும் திருப்பூரில் இந்த இறுதி ஊர்வலத்தில் வாகன பேரணிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா ? என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சம்சுதீன் கூட்டாளிகளுடன் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் அந்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்ப்பட்ட மோதலில் எதிர்த்து பேசியவரை தாக்க கத்தி எடுத்த சம்சுதீனை கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக கூறும் காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக சம்சுதீன் கூட்டாளி கார்த்திகேயன் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடிவருவதாகவும் தெரிவித்தனர்.

கடந்த வருடம் திருப்பூரில் பட்டபகலில் கூட்டத்திற்குள் கத்தியை உருவி ரவுடியை குத்திய வழக்கில் வீடியோவுடன் சிக்கியதால் பிரபலமான சம்சுதீனுக்கு தற்போது தீம் மியூசிக் போட்டு சமூக வலைதளங்களில் கட் வீடியோ பதிவிடும் அளவுக்கு ஆதரவாளர்கள் திரண்டதாக கூறப்படுகின்றது.

ரவுடிகளையும், கொள்ளையர்களையும் காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கதவறியதால் ஊரடங்கை மீறி இப்படியொரு பேரணியை அவர்கள் நடத்தி உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments