ஒரு தலை காதல் சாத்தான் கல்வீசி அடித்துக் கொலை... செவிலியர் கொலைக்கு பதிலடி.!
வீட்டில் தனியாக இருந்த செவிலியரை, வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை நாடகமாடியவனை ஊர் மக்கள் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சம்பாயா காண்ட்ரிகாவைச் சேர்ந்த சுஷ்மிதா சித்தூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். சுஷ்மிதா மருத்துவமனைக்கு செல்லும் போதும் திரும்பி வரும் போதும், அதே கிராமத்தை சேர்ந்த கிரானைட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சின்னா என்ற இளைஞர் பின் தொடர்வதை வாடிக்கையாக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக சுஷ்மிதாவை , கள்ள பருந்து போல வட்டமிட்டு வந்த சின்னா, சுஷ்மிதாவை மறித்து காதலை சொல்ல, அவர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகின்றது.
இருந்தாலும் அடங்காமல் தனது காதலை ஏற்க சுஷ்மிதாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளான். இதனை ஏற்க மறுத்த சுஷ்மிதா , சின்னாவின் காதல் சேட்டை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் ஆத்திரமடைந்த சின்னா, சுஷ்மிதா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டிற்குள் புகுந்து சுஷ்மிதாவை குத்திக் கொலை செய்துள்ளான்.
சுஷ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்ட நிலையில். வெளியே வந்த சின்னா, அவர்களிடம் இருந்து தப்புவதற்காக தனது கழுத்தை லேசாக அறுத்து கொண்டு உயிருக்கு போராடுவது போல கீழே விழுந்து நடித்துள்ளான்.
அவன் செவிலியர் சுஷ்மிதாவை கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சி நாடகம் ஆடுவதை அறிந்த கிராம மக்கள் அனைவரும் ஆத்திரமடைந்து பொங்கி எழுந்தனர். கழுத்தை அறுத்துக் கொண்டு தரையில் படுத்து நாடகமாடிய கொலைகாரன் சின்னா மீது சரமாரியாக கற்களை வீசியும் அடித்தும் கொலை செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, சித்தூர் முதலாவது நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நரசிம்ம ராஜு இருவரின் சடலத்தையும் கைப்பற்றி சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தார்
அதே நேரத்தில் இந்த ஒருதலை காதல் சாத்தான் மீது சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைத்திருந்தால் இது போன்ற விபரீதங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்பதே அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.
Comments