12ந் தேதி மேட்டூர் அணை திறப்பு எதிரொலி..! டெல்டா மாவட்டங்களில் உழவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம்
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12ந்தேதி தண்ணீர் திறந்து விட இருப்பதை முன்னிட்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உழவுப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக வருகிற 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் முதற்கட்டப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குறுவை சாகுபடி பணியிலும்,சாகுபடி துவக்க பணியிலும் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான் போன்ற பகுதிகளில் தற்சமயம் நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
வயல்களை டிராக்டர் கொண்டு உழுதல், வயலை சமன் படுத்துதல் வயல்களில் தண்ணீர் நிரப்புதல் ,வரப்புகளை உயர்த்துதல்,பாய்நாற்றங்கால் அமைத்தல் போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறுவை சாகுபடிக்கான விதை நெல் மற்றும் உரங்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments