இசையெனும் மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று.. எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..!
எம்ஜிஆர் முதல் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அறிமுகம் ஆன நாயகர்கள் வரை பலருக்கும் பின்னணி பாடிய பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 75வது பிறந்தநாளில், அவரது நினைவைப் போற்றும் ஒரு செய்தித் தொகுப்பு....
ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946ம் ஆண்டு இதே தேதியில் பிறந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எம்.ஜி.ஆர் மூலம் கே.வி.மகாதேவன் இசையில் அவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 16 மொழிகளில் பல ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளுடன், 6 முறை தேசிய விருதுகளைப் பெற்ற எஸ்.பி.பி.க்கு மத்திய அரசு பத்மவிபூஷண் வழங்கி கவுரவித்தது.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், மோகன் போன்ற பல நடிகர்களின் குரலாக எஸ்.பி.பியின் குரல்தான் திரையில் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடகராக மட்டுமின்றி நடிகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தியவர் எஸ்.பி.பி.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி. செப்டம்பர் 25ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
காலங்கள் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்.பி.பி.யின் குரலும் பாடல்களும் இன்னும் பல தசாப்தங்களுக்கு ரசிகர்கள் நினைவை விட்டு நீங்காது ......
Comments