அதே டெய்லர்... அதே வாடகை..! ஊர் சுற்றிகளுக்கு வந்தது கொரோனா..! அனைத்தும் ஃபேக் அட்ரஸ்
ராமேஸ்வரத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒன்பது பேரும் போலியான முகவரி மற்றும் செல்போன் நபரை கொடுத்து கம்பி நீட்டியதால் சுகாதாரத்துறையினர் அவர்களை வீதி வீதியாக தேடிவருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வீட்டுக்கு அடங்கா கால்களை கொண்ட ஊர் சுற்றிகள் சிலர் அநாவசியமாக இரு சக்கரவாகனத்தில் வலம் வருவது வாடிக்கையாக மாறிபோன நிலையில் அவர்களை கட்டுப்படுத்த ராமேஸ்வரம் போலீசார் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை மீறி ராமேஸ்வரம்,பாம்பன் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரிக்கையில் பெரும்பாலானோர் மருத்துவ காரணத்திற்காகவும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வந்ததாகவும் சாக்கு போக்கு கூறியதால் போலீசார் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
இதன் முடிவுகள் புதன்கிழமை வெளியானது. 82 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 9 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தொற்று என்பதை தெரிவித்து தனிமைப்படுத்திக் கொள்ள் அறிவுறுத்துவதற்கு அழைத்தால் அந்த பெயரில் எவரும் இல்லை என்பதே பதிலாக வந்துள்ளது. வீட்டு முகவரிக்கு சென்று பார்க்கலாம் என்று ஆள் அனுப்பி தேடினால் அந்த வீட்டு முகவரியில் அப்படி ஒரு நபரே இல்லை என்பது தெரியவந்ததுள்ளது. அனைவரும் சொல்லிவைத்தாற்போல போலியான முகவரி செல்போன் நம்பர் கொடுத்துச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவர்கள் கொடுத்த தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி தவறு என்பதனால் அவர்கள் 9 பேரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்த சுகாதாரத் துறையினர் தெரு தெருவாக தேடி வருகின்றனர்.
சமூகத்தில் விழிப்புணர்வில்லாமல் மெத்தனமாக வலம் வரும் இந்த 9 பேர் மூலமாக எத்தனை பேருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்படபோகின்றதோ என்ற பதட்டத்தில், காவல்துறை உதவியுடன் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Comments