ரேசனில் 14 வகை பொருட்கள் வழங்கும் திட்டம்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்து நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடைகள் மூலம் ஜூன் மாதம் முதல் வழங்கிட கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதன்படி, 2 கோடியே 11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம்பருப்பு, புளி, கடலைப்பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்தூள், குளியல் சோப்பு, துணி சோப்பு, துணிப்பை ஆகிய 13 பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட உள்ளன. தற்போது இதனுடன் 14 வது பொருளாக டீத்தூள் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த முன்னிட்டு, மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று துவக்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, 5ஆம் தேதி சனிக்கிழமை முதல் நியாயவிலை கடைகள் வாயிலாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று கடந்த 1ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களின் பூசாரிகள், பட்டாச்சாரியர்கள் போன்றோருக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 வகை மளிகை பொருட்கள், 10 கிலோ அரிசி போன்றவற்றை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். மேலும் மாவட்டத்திற்கு ஆயிரம் மரக்கன்றுகள் என்ற வகையில் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.
Comments