2 நாட்களில் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் பிளஸ் 2 தேர்வுகள் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்துக் கேட்ட பின், அதன் அடிப்படையில் இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில், தமிழகப் பாடத்திட்டத்தில் உள்ளவர்களுக்குத் தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்துச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு நடத்துவது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகங்கள், கல்வியாளர்கள் என அனைவரின் கருத்தையும் இன்றும், நாளையும் கேட்டறிந்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் எனத் தெரிவித்தார்.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக்களைப் பதிவு செய்ய மின்னஞ்சல் முகவரியைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம் என்றும், 14417 என்கிற தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் கருத்துக்களைப் பதிவு செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Comments