சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து.! தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா?
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்சி நிர்வாகம், கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் மே 4ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு தேர்வையும் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்ததை அடுத்து, 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்தும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்தும் அறிவிப்பு வெளியிட்டது.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் உறுதியான முடிவை விரைவாக எடுக்கும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில்தான் செவ்வாய்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் இந்த ஆண்டு சிபிஎஸ்சி 12ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இதனிடையே தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட +2 பொதுத்தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். கொரோனா சூழலில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசு தற்போது சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துள்ளதால், தமிழக அரசு விரைவில் பிளஸ் 2 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments