மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து - பிரதமர் மோடி
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்சி நிர்வாகம், கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் மே 4ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு தேர்வையும் நடத்த திட்டமிட்டிருந்தது.
ஆனால் கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்ததை அடுத்து, 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்தும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைத்தும் அறிவிப்பு வெளியிட்டது.
தொடர்ந்து கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து அண்மையில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.
இடையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் உறுதியான முடிவை விரைவாக எடுக்கும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில்தான் செவ்வாய்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மாணவர்களின் நலனே முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் நன்கு வரையறுக்கப்பட்ட வழிமுறைகளுடன் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments