20 நாள் சிகிச்சை... ரூ 19 லட்சம் கட்டணம் கழட்டி விட்ட கொடுமை..! சவுக்கியமில்லா சவுமியா ஆஸ்பத்திரி
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் உள்ள சவுமியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் சிகிச்சை பெற்றவருக்கு 19 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொண்டு தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுபாடு இல்லாத நிலையில், தங்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்று கூறி கழட்டிவிடப்பட்டதால், நோயாளி பரிதாபமாக உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது தந்தை சுப்பிரமணியம் 62 வயதான இவருக்கு கடந்த 3 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பெருமாநல்லூர் பகுதியில் உள்ள சௌமியா என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் .
வேறு இணை நோய்கள் இல்லாத நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் ஆக்சிஜன் பரிசோதனை செய்யப்பட்டு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை ஒதுக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் நுரையீரலில் 10 சதவீத தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
23ஆம் தேதி இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் இன்னும் சில தினங்களில் வீட்டிற்கு சென்று விடலாம் என மருத்துவர்கள் கூறிய நிலையில் 24ஆம் தேதி காலை மருத்துவர் ஆக்சிஜன் அதிக அளவு தேவைப்படுவதாகவும் தங்கள் மருத்துவமனையில் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லுமாறு சுப்பிரமணியத்தின் மகன்களிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலையில் சவுமியா மருத்துவமனை ஆக்ஸிஜனை காரணம் காட்டி அறிவுறுத்தியதால், வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வெண்டிலேட்டர் வசதி தேவைப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுப்பிரமணியம் 25ஆம் தேதி உயிரிழந்தார். இதனிடையே பெருமாநல்லூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த 21 நாட்களுக்கும் தினந்தோறும் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை கட்டணமாக வசூலித்து உள்ளனர்.
மொத்தமாக 19 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் கட்டியுள்ள போதும் அதற்கு உரிய விவரங்கள் அளிக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ள அவரது மகன்கள், சவுமியா மருத்துவமனை நிர்வாகத்தினர் குணமடைந்து வருவதாக தெரிவித்திருந்த நிலையில் அடுத்தநாளே அபாய கட்டத்தில் இருப்பதாக வேறு மருத்துவமனைக்கு மாற்ற கூறியதே சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், அந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனரிடமும் புகார் அளித்துள்ளனர். மேலும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சவுமியா மருத்துவமனை தரப்பில் கேட்ட போது விளக்கம் அளிக்க வேண்டிய தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ் சென்றிப்பதாகவும் அவர் வந்து உரிய விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு நிர்ணயித்ததைவிட மூன்று மடங்கு கட்டணம் வசூலித்துக் கொண்டு சவுக்கியமில்லா சிகிச்சை அளித்த புகாருக்குள்ளான சவுமியா மருத்துவமனை தவறிழைத்திருந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments