கொரோனா சிகிச்சை... புதிய வழிகாட்டுதல்கள் என்னென்ன?
கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
வீட்டுத்தனிமையில் இருப்போர், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்கப்படுவோர், மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் என கொரோனா நோயாளிகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதில்லை. அவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தால் போதுமானது. வீட்டுத்தனிமையில் இருப்போர் ஜிங்க் மற்றும் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சல் இருந்தால் பாரசிட்டமல் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். 6 மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும். தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்து படுப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
கொரோனா நோயாளிகளுக்கு இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90 முதல் 94க்குள் இருந்தால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம். இவ்வாறு, கோவிட் கேர் சென்டர்களில் அனுமதிக்கப்படுவோருக்கு வாந்தி இருந்தால் டெக்சாமெத்தாசோன், Methyl prednisolone உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும்.
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழே குறைந்திருந்தால் மட்டுமே மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம். ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழ் குறைந்துள்ள கொரோனா நோயாளிகளை ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும்.
அதேபோல டிஸ்சார்ஜ் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகியுள்ளன. அந்த வகையில், அனைத்து வகையாக கொரோனா நோயாளிகளுக்கும் சாதாரண அறையில் ஆக்சிஜன் அளவு 92 இருந்தால் மட்டுமே குணமடைந்ததாக கருதப்படுவார்கள். இதே ஆக்சிஜன் அளவு 3 நாட்களுக்கு நீடித்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். டிஸ்சார்ஜ் ஆன பிறகும் மூச்சுப்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
Comments