உடலில் ஆக்சிஜனை அதிகரிக்கும் லிங்க முத்திரை? ஐ.ஐ.டி. கொடுத்த அங்கீகாரம்
கொரோனா நோயாளிகள் லிங்க முத்திரை செய்வதின் மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கலாம் என மதுரையைச் சேர்ந்த பெண் சித்த மருத்துவர் கூறியுள்ளார். லிங்க முத்திரை தொடர்பான அவரது ஆய்வுக்கு சென்னை ஐ.ஐ.டி.யும் அங்கீகாரம் அளித்துள்ளது.
லிங்க முத்திரை மூலம் உடலில் ஆக்சிஜன் அளவை வெகுவாக அதிகரிக்கலாம் என்று கூறியுள்ள மதுரை கப்பலூரில் இயங்கி வரும் சித்தர் வனம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சாலை ஜெய கல்பனா அது தொடர்பான ஆய்வு ஒன்றையும் நடத்தி அதன் முடிவுகளை சமர்பித்துள்ளார். இதை பரிசீலித்த சென்னை ஐ.ஐ.டி. தொடு உணர்வு ஆய்வகத்துறை, ஜெய கல்பனாவின் லிங்க முத்திரை ஆய்வுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நுரையீரலில் நீர் கோர்த்து சளி தங்குவதால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மூச்சு திணறல் உருவாகிறது. அப்போது, வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சையளிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. லிங்க முத்திரை செய்வதால் நெற்றி, மூக்கு, தொண்டை, நுரையீரல் பகுதிகளில் 1 டிகிரியில் இருந்து 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும், உடல் வெப்பம் அதிகரிக்கும் போது நுரையீரலில் தேங்கியுள்ள சளி கரைந்து சுவாசிக்கும் திறன் இயல்பாகவே அதிகரிக்கும் என்கிறார் சித்த மருத்துவர் கல்பனா.
கொரோனா நோயாளிகளுக்கு சாதாரணமாக நுரையீரலில் இருக்கும் தொற்று அளவையும், லிங்க முத்திரை செய்த பின் இருக்கும் நுரையீரலின் நிலையையும் சித்த மருத்துவர் கல்பனா வேறுபடுத்தியும் காட்டியுள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு இயல்பாக காணப்படும் படபடப்பு, அநீசியான மனநிலை இவற்றையும் லிங்க முத்திரை சரி செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். பிராணயாமாம் செய்வதின் மூலமும், குப்புறப்படுத்தல் மூலமும் உடலில் அதிகரிக்கும் ஆக்சிஜன் அளவு உடனடியாக குறைந்துவிடும் எனவும், லிங்க முத்திரை மூலம் அதிகரிக்கும் ஆக்சிஜன் அளவு 4 மணி நேரத்திற்கு உடலில் இருக்கும் எனவும் கல்பனா தெரிவித்துள்ளார்.
உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்த நிலையிலோ இந்த லிங்க முத்திரையை செய்யலாம். லிங்க முத்திரை அபரிமிதமான உஷ்ணத்தை உருவாக்கும் என்பதால், 4 மாதம் வரையிலான இளம் கர்ப்பிணிகள் இதை செய்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் சிறுவர்கள், முதியோர், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த லிங்க முத்திரையைச் செய்யலாம். கொரோனாவுக்காக ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட எந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், செயற்கை ஆக்ஸிஜன் துணையுடன் இருந்தாலும்கூட இந்த முத்திரையை செய்யலாம் என மருத்துவர் கல்பனா கூறியுள்ளார்.
Comments