சென்னையில் வீடு வீடாக மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் துவக்கம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் வீடு வீடாக சென்று மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக மளிகைப் பொருட்களை விற்பனை செய்யலாம். வியாபாரிகள் யாரும் கடைகளைத் திறக்க அனுமதியில்லை. வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று வழங்கலாம். வீடு வீடாக சென்று மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய 7,500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
11 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு 300 ரூபாய்க்கும், 20 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இந்த திட்டம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் அமைச்சர்கள் மாசுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Comments