பள்ளியில் பாலியல் தொந்தரவு: 900 முன்னாள் மாணவர்கள் கூட்டாக புகார்
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மாணவர்கள் 900 பேர் கூட்டாக கையெழுத்திட்டு புகார் அளித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து, சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர், எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமம், ஷெனாய் நகர் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆகிய 3 தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் காவல் துறையினரும் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பாக, முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த 900-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பள்ளியில் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த காலங்களில் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டதாகவும், இதுதொடர்பாக பல ஆண்டுகளாக புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் தரப்பில் உரிய விசாரணை நடத்தாதது கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளியில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத என பலர் மீது கொடுக்கப்பட்ட புகார்களில், ஒன்று கூட இதுவரை விசாரிக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் மாணவர்கள், இதுபோன்ற புகார்களுக்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகியுள்ள இக்கடிதம் குறித்து காவல் துறையினர் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments