காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய துணிகரம்... கம்பி எண்ணும் அடாவடி கும்பல்

0 6171

சென்னையில் கள்ளச்சந்தையில் மது விற்றவர்களை பிடிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பதாகவும், மது வாங்க சென்ற சரவண பெருமாள் என்பவரிடம் பணத்தை மட்டும் பறித்து கொண்டு அடித்து துரத்தியதாக புகார் வந்துள்ளது.

இதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் சஜீபா, மற்றொரு உதவி ஆய்வாளரான மணிவண்ணன் மற்றும் காவலர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, தாக்கப்பட்ட சரவண பெருமாளை மது வாங்குவது போல் அனுப்பி வைத்து, அவரை பின் தொடர்ந்து சென்று, மதுபானம் விற்பனை செய்துகொண்டிருந்த மீசை சேகர் என்பவனை மடக்கி பிடித்தனர்.

பின்னர், மீசை சேகரை அழைத்துக் கொண்டு அவனது வீட்டுக்குச் சென்று மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூடிய ஆண்களும், பெண்களும் உதவி ஆய்வாளர் சஜீபாவை தாக்க தொடங்கினர்.

அதிர்ச்சியடைந்த சஜீபா, தன்னுடன் வந்த மற்றொரு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவலர்களை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் கள்ளத்தனமாக மது விற்ற நபரை காவல் நிலையம் அழைத்துச் செல்ல விடாமல், போலீஸ் வாகனத்தை வழிமறித்து சாவியை பிடிங்கிக் கொண்டும், லத்தியை பறித்துக் கொண்டும் தகராறு செய்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட 11 பேரும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியிருப்பது தெரிய வந்தது.

பின்னர், போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கற்பகம், நந்தினி, செல்வி, காஞ்சனா, சசிகலா, மணிகண்டன் உட்பட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவாகியுள்ள முக்கிய நபர்கள் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தப்பை தட்டிக் கேட்க சென்ற காவல்துறையினரை அடாவடித்தனத்தால் அடக்க நினைத்த கும்பல், தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments