கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்புநிதி - முதலமைச்சர் அறிவிப்பு

0 3427

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், பட்டப் படிப்பு வரை கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணம் மூன்று இலட்சம் ரூபாய் வழங்கவும், உறவினர் / பாதுகாவலர் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக 18 வயது நிறைவடையும் வரை மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்க அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கொரோனாவால் பெற்றோரை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகையை வட்டியோடு வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்க இடம் வழங்கவும், பட்டப் படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கவும் உத்தரவிட்டுள்ளார். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசு விடுதியில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.

ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, கொரோனாவால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் 5 இலட்ச ரூபாய் வைப்பீடு செய்யப்படும். அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments