நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள்... மாற்று ஏற்பாடுகளில் அரசு தீவிரம்..!

0 2228

தமிழகத்திலுள்ள குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள்  நிரம்பியதால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாற்று ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியதால், அவசர சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 144 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 339 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இவை அனைத்துமே நிரம்பியதால், படுக்கைகளுக்காக கத்திருக்காமல் மருத்துவமனை வளாகத்திலேயே அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கரூரில் லேசான அறிகுறிகளுடன் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர தொற்றுக்கு ஆளாகுபவர்கள் மட்டுமே மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் அங்கு மொத்தமுள்ள 500 ஆக்சிஜன் படுக்கைகளில் 205 படுக்கைகள் காலியாக உள்ளன.

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் முழுவதுமாக நிரம்பியதால், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கதிர்காம மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுவருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 1,675 ஆக்சிஜன் படுக்கைகளில் 1,650 படுக்கைகள் நிரம்பின. 

ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பியதால் சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 150 ஆக்சிஜன் படுக்கைகளும், பெருந்துறை அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 380 ஆக்சிஜன் படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பின.

திருவள்ளூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,400 இலிருந்து 967 ஆக குறைந்துள்ளது. அதேசமயம் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தமுள்ள 220 ஆக்ஸிஜன் படுக்கைகளில், 25 படுக்கைகள் காலியாகவுள்ளன.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 500 படுக்கைகளுடன் 18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட தாய், சேய் நலன் கட்டடம் தற்போது பெருந்தொற்றின் காரணமாக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அங்குள்ள 360 ஆக்சிஜன் படுக்கைகளில் இன்று முதல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments