வரி விலக்கு அளிக்க.. மாநிலங்கள் வலியுறுத்தல்..!
சரக்கு சேவை வரி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற மாநில நிதியமைச்சர்கள், கொரோனா சிகிச்சையுடன் தொடர்புடைய அனைத்துப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.
சரக்கு சேவை வரி தொடர்பான குழுவின் 43ஆவது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலியில் நடைபெற்றது. 8 மாதங்களுக்குப் பின் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், நிதித்துறைச் செயலர், மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நிதியமைச்சர் தியாகராஜன், நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கானொலியில் பங்கேற்றனர். கொரோனா தடுப்பு மருந்துக்கு 5 விழுக்காடும், கொரோனா சிகிச்சைக்கான கருவிகளுக்கு 12 விழுக்காடும் வரி விதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு எதிரான போரில் உதவும் வகையில் இவற்றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் எனப் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் வலியுறுத்தினர். வரி விலக்கு அளிக்க மத்திய அரசு மறுப்புத் தெரிவித்தது. சரக்கு சேவை வரியை நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்தியது.
Comments