கொட்டித்தீர்த்து குறைந்த மழை..! பாதிக்கப்பட்ட விவசாயம்
கன்னியாகுமரியில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 16 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முக்கிய அணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு, ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்ததுடன் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை மெல்ல குறையத் தொடங்கி இருக்கிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்து, நீர் வெளியேற்றமும் குறைக்கப்பட்டுள்ளது.
48 அடி கொள்ளளவுகொண்ட பேச்சிபாறை அணைக்கு 3ஆயிரத்து 164 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் 531 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணைக்கு 2ஆயிரத்து 667 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், 2451 கன அடியாக தண்ணீர் வெளியேற்றம் குறைக்கபட்டுள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணையில் இருந்து 261 கன அடியாக உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாய நிலங்கள் மற்றும் சாலைகள் , குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் தேங்கிய நீர் வடியத் துவங்கி உள்ளது. இருந்தாலும் நீர் தேங்கியதால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சேதத்தை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் காரணமாக கோதையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் தடுப்பு வேலியைத் தாண்டி நீச்சல் குளத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்துச் செல்கிறது.
Comments