திருப்பூர் : 4 மகன்கள் கொரேனாவுக்கு பலி ... பிள்ளைகளை தேடிய மூதாட்டி உண்மை தெரிந்து உயிரிழப்பு!
திருப்பூர் அருகே 4 மகன்களையும் கொரோனாவுக்கு பலி கொடுத்த மூதாட்டி தன் மகன்கள் இறந்து போன தகவலை கேட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாளுக்கு தங்கராஜ், ராஜா, சவுந்தரராஜன்,தெய்வராஜ் என்ற 4 மகன்கள் உண்டு. இதில் இளையமகனான 42 வயது தெய்வராஜ் இவரின் மனைவி சாந்தி ஆகியோர் சில நாள்களுக்கு முன் கொரோனாவில் உயிரிழந்தனர். இதையடுத்து, தெய்வராஜின் சகோதரர்களான தங்கராஜ், ராஜா, சவுந்தராஜன் ஆகியோரும் கொரோனா தாக்கி அடுத்தடுத்து இறந்து போனார்கள். 4 மகன்களும் தங்கள் வயது முதிர்ந்த தாயை நன்கு கவனித்து வந்துள்ளனர். தினமும் யாராவது ஒருவர் வீட்டுக்கு வந்து தாயாருக்கு தேவையான விஷயங்களை செய்து வந்துள்ளனர். அதே போல, மருமகள்களும் தங்கள் மாமியாரை நல்ல முறையில் கவனித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா காரணமாக 4 மகன்களும் ஒரு மருமகளும் இறந்துவிட 3 நாட்களாக தாயை பார்க்க யாரும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், வருத்தமடைந்த மூதாட்டி , மகன்கள் ஏன் தன்னை பார்க்க வரவில்லை என்று உறவினர்களிடத்தில் கேட்டுள்ளார் . உறவினர்கள், மகன்கள் இறந்தை விஷயத்தை அவரிடத்தில் தெரிவிக்காமல் மூடி மறைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் உறவினர்களிடத்தில் மீண்டும் மகன்கள் பற்றி கேட்டதால், அவர்கள் மெல்ல மகன்கள் 4 பேரும் உயிரிழந்த தகவலை பாப்பம்மாளிடம் கூறியுள்ளனர். கொரோனாவுக்கு 4 மகன்களையும் பலி கொடுத்த அந்த பரிதாப தாய் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். உறவினர்கள் ஆறுதல் கூறி அவரை உறங்க வைத்துள்ளனர். ஆனால் ,இரவு உறக்கத்திலேயே மூதாட்டி பாப்பம்மாள் இறந்து போனார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து பலியானது வெள்ளிரவெளி கிராம மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Comments