சென்னையில் குறையவும்.. கோவையில் பெருகவும் இது தான் காரணம்...! கொரோனா சூப்பர் ஸ்பிரெட்டர்ஸ்

0 7666
சென்னையில் குறையவும் கோவையில் பெருகவும் இது தான் காரணம்...! கொரோனா சூப்பர் ஸ்பிரெட்டர்ஸ்

ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்ததாலும், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களை கட்டுப்படுத்தியதாலும் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதாகவும், கோவையில் கொரோனாவை பரப்பும் சூப்பர் ஸ்பிரட்டர்களாக நோயாளிகளின் உறவினர்களே இருப்பதாகவும் மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸிஜன் படுக்கைக்கு தட்டுப்பாடு... அரசு மருத்துவமனைகளில் அணிவகுத்து நின்ற ஆம்புலன்ஸ்கள் என கடந்த வாரம் மூச்சுத்திணறலுடன் கொரோனா நோயாளிகளைத் தவிக்க விட்டது தலைநகர் சென்னை..!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் அதன் தொடர்ச்சியாக அமலுக்கு வந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு, கூடுதல் படுக்கை வசதிகள், தட்டுப்பாடில்லா ஆக்ஸிஜன் வினியோகம் என தமிழக அரசு மேற்கொண்ட விரைவான அதிரடி நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு சென்னையில் குறைய தொடங்கி இருக்கின்றது.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை கவனிப்பதற்கு என்று தங்கி இருந்த நோயாளிகளின் உறவினர்கள் தங்கள் வீடுகளுக்கும், வார்டுக்களுக்குள்ளும் சென்று வந்த நிலையில் அவர்களை கொரோனா வார்டுக்குள் நுழைய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கொரோனா பரவலை தடுக்க முக்கிய காரணமாக அமைந்தது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை கூடுதலாக உருவாக்கி அடுத்தடுத்த நாட்களில் அந்த சிறப்பு சிகிச்சை மையங்களை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததோடு, அவற்றில் கொரோனா நோயாளிகளை அவர்களது நோயின் தீவிரத்துக்கு ஏற்ப வகைப்படுத்தி பிரித்து சிகிச்சை அளிப்பதும் சென்னையில் நோய் பரவலை தடுத்து குணமாவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது.

இதனால் தற்போது சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்கு தட்டுபாடில்லா நிலை உருவாகியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 157 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன. ஸ்டான்லி மருத்துவமனையில் 28 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 13 படுக்கைகளும்,கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகளும், கிங் இன்ஸ்டியூட் அரசு சிறப்பு மருத்துவமனையில் 4 ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சென்னையை விட சிறிய நகரான கோவையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. சென்னையில் வியாழக்கிழமை 2779 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், கோவையில் பாதிப்பு எண்ணிக்கை 4734 ஆக பதிவாகி உள்ளது. 2074 நோயாளிகளுடன் திருப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்திலேயே கோவையில் தான் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துவருவதாக கூறப்படுகின்றது.

இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் , கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் ஆம்புலன்சிலேயே சிகிச்சை பெறும் நிலை தொடர்கிறது.

ஆரம்பத்தில் 333 ஆக இருந்த ஆக்சிஜன் படுக்கைகளை 900 ஆக உயர்த்திய பின்னரும் ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு நீடித்துவருகின்றது. இங்கு கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணம் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு உதவி செய்வதாக கூறி தங்கியிருந்து அவ்வபோது வீட்டுக்கு சென்றுவரும் நோயாளிகளின் உறவினர்கள் தான் சூப்பர் ஸ்பிரட்டர்களாக வலம் வருவதாக மருத்துவர்கள வேதனை தெரிவிக்கின்றனர்.

இது ஒரு தொற்று நோய் என்பதை அறியாமல், எந்த ஒரு கட்டுப்பாடுக்கும் அடங்காமல், அலட்சியமாக ஒவ்வொரு கொரோனா நோயாளியையும் குறைந்த பட்சம் 5 பேராவது பார்த்துச் செல்வதாகவும், இவர்கள் மூலம் கொரோனா எளிதாக பரவுவதாக சுட்டிகாட்டுகின்றார் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா.

கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள டீக்கடையில் முண்டியடிக்கும் கூட்டமும் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாகவும், பலமுறை எச்சரித்தும் கேட்பதில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றார் மருத்துவமனை முதல்வர் நிர்மலா.

முழு ஊரடங்கிலும் ஏதாவது காரணத்தை சொல்லி சுதந்திரமாக இயக்கப்படும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், அரசின் உத்தரவை மீறி தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகளை கண்டு கொள்ளாத அதிகாரிகளாலும் கொரோனா தடையின்றி பரவுவதாக கோவையின் நலனில் அக்கறை உள்ளோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

திருப்பூரில் மாஸ்க் மற்றும் பிபிஇ கிட் தடுப்பு உடைகள் தயாரிப்பதற்கு மட்டும் 250 நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பனியன் நிறுவனங்கள் அதிகமாக உள்ள திருப்பூரின் 2 மண்டலங்களிலும் நூல் மில்கள், விசைத்தறிகூடங்கள் மற்றும் கோழிப்பண்ணைகள் அதிகமாக உள்ள பல்லடத்திலும் தினமும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.

சென்னையை போல உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு கோவை மற்றும் திருப்பூரில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு மேற்க்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி விழிப்புணர்வுடன் பொதுமக்கள் பொறுமை காத்து வீட்டில் இருந்தாலே கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments