சாப்பாட்டு ராமனுக்கு சாப்பாடு இனி ஜெயிலிலே..! அண்டாவாயர் போலி டாக்டராம்..!

0 20090
சாப்பாட்டு ராமனுக்கு சாப்பாடு இனி ஜெயிலிலே..! அண்டாவாயர் போலி டாக்டராம்..!

சித்தமருத்துவம் படித்துவிட்டு ஆங்கிலமருத்துவம் பார்த்து வந்த யூடியூப் பிரபலம் சாப்பாட்டு ராமன் கள்ளக்குறிச்சி அருகே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அகப்பை சோற்றை அப்படியே உருண்டையாக்கி சாப்பிட்டு பிரபலமானவர், ஆங்கில மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்ததால் அகப்பட்டுக் கொண்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

மங்களகரமாக மஞ்சளில் ஆரம்பிக்க பல குக்கிங் சேனல்கள் இருந்தாலும், ஒரு குக்கர் பிரியாணியை இலையில் கொட்டி, அதில் தயிரை ஊற்றி ஒற்றை ஆளாக சில நிமிடங்களிலேயே வாயில் உருட்டிப்போட்டதால் யூடியூப்பில் பிரபலமானவர் சாப்பாட்டு ராமன் என்று அழைக்கப்படும் சித்தமருத்துவர் பொற்செழியன்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தில் சித்தமருத்துவம் பார்த்து வந்த சாப்பாட்டுராமன் பொற்செழியன், அய்யப்பன் என்ற பெயரில் சித்தாகிளினிக்கும் நடத்திவந்தார். 60 வயதான பொற்செழியன் சித்தமருத்துவத்தில் பி.இ.எம்.எஸ் படித்துவிட்டு கடந்த 28 வருடங்களாக கிளினிக் நடத்திவந்தாலும். 80ஸ் ரஜினியின் ஹேர் ஸ்டைலில்.... ஹேர் டை உபயத்தால் கருகரு முடியுடன்.... சாப்பாட்டுராமன் என்ற யூடியூப் சேனல் மூலம் அசைவ உணவுகளை சாப்பிட்டே பிரபலமானார்.

எப்படி இவரால் மட்டனையும் சிக்கனையும் இவ்வளவு வேகமாக சாப்பிடமுடிகிறது ? என்று வியந்தவர்கள் ஏராளம்..! இதனால் 3 ஆண்டுகளில் 10 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கடந்தார் சாப்பாட்டுராமன். சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும் சித்த மருந்துகளையும் ஆன்லைன் வாயிலாக விற்று வந்தார்.

இந்த நிலையில் சித்தமருத்துவரான பொற்செழியன், ஆங்கில மருத்துவம் பார்த்துவருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு புகார்கள் சென்றன. இதனிடையே 3 நாட்களுக்கு முன்பு யூடியூப்பில் வீடியோ ஒன்று வெளியிட்ட சாப்பாட்டு ராமன் ஜி, கொரோனா வராமல் இருக்க ஹீலர் பாஸ்கர் பாணியில் கொடுத்த டிப்ஸ் அவரை சர்ச்சையில் சிக்க வைத்தது.

ஊரே பதறும் கொரோனாவுக்கு சித்தமருத்துவம் சொல்வதாக கூறி அவர் தெரிவித்த கருத்துகள் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்று கூறப்படுகின்றது. இதையடுத்து சாப்பாட்டுராமனின் கிளினிக்கிற்கு காவல்துறையினருடன் சென்ற மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

அங்கு பொற்செழியன், தன்னிடம் சிகிச்சைக்கு வருவோரிடம், ஆங்கில மருந்துகள் வழங்குவது உறுதி செய்யப்பட்டது. அவரது கிளினிக்கில் இருந்து ஏராளமான ஆங்கில மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சாப்பாட்டுராமனான பொற்செழியனை கீழ்குப்பம் காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாப்பாட்டு ராமன் பொற்செழியனை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

3 நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் கூட, கொரோனா பாதிப்பால் மக்கள் அவதிப்படும் சூழலில், வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு வீடியோ பதிவிடுவதற்கு தனது மனசுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அதனால் கடந்த ஒரு மாதமாக வீடியோ எதும் பதிவிடவில்லை என்றும் சாப்பாட்டு ராமன் கூறி இருந்தார்.

ஊரடங்கால் கொரோனா குறைந்துவருவதால், அடுத்தவாரம் புதிய சாப்பாட்டு வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிடும் திட்டத்துடன் வீட்டில் இருந்த சாப்பாட்டுராமனுக்கு, சாப்பாடு இனி ஜெயிலிலே..! என போலீசார் அழைத்துச் சென்றது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments