கரை கடந்த யாஸ் புயல்..! மேற்கு வங்கத்தில் ஒரு கோடிப் பேர் பாதிப்பு; ஒடிசாவின் 2 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தன
யாஸ் புயல் கரைகடந்த நிலையில், ஒடிசா மாநிலத்தின் 2 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு கோடிப் பேர் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா: வங்கக்டலில் உருவான அதிதீவிரப் புயல் யாஸ் வடக்கு ஒடிசாவில் பாலாசூருக்குத் தெற்கே நேற்று கரையைக் கடந்தது. தாம்ரா என்னுமிடத்தில் புயல் கரையைக் கடந்தபோது மரங்களை ஆட்டிப் படைத்ததுடன் வீடுகள், கட்டடங்களின் கூரைகளையும் பிய்த்தெறிந்தது.
மிட்னாப்பூர்: புயலின் எதிரொலியாகக் கடலோரப் பகுதிகளில் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள திகாவில் அலைகள் சீற்றத்துடன் எழுந்ததால் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.
ஒடிசாவில் பாலசோர் மற்றும் பத்ரக் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின்கம்பங்கள் விழுந்து கிடப்பதால் இரு மாவட்டங்களிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளும், கிராமசாலைகளும் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடல்நீர்உட்புகுந்ததால் 128 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெளியே வர முடியாமல் தவித்த மக்களை படகுகளில் சென்று மீட்புக் குழுவினர் அழைத்து வந்தனர்.
யாஸ் புயல் கரை கடந்த போதிலும் ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
Comments