நாளை கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்..! கோவிட் நிவாரணப் பணிகள் இறக்குமதி மீதான வரிகள் ரத்தாகுமா?
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கோவிட் நிவாரணத்திற்கான இறக்குமதிகள் மீது வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதி மீது 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இது போல் ரெகுலேட்டர்கள், சிலிண்டர்கள் மீதும் 5 முதல் 18 சதவீதம் வரை வரி வசூலிக்கப்படுகிறது. இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்பிரச்சினை அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே போன்று ஓட்டல்கள் மற்றும் உணவக சங்கங்கள் சார்பில் நிர்மலா சீதாராமனிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் விடுதிக் கட்டணம் மீதான ஜிஎஸ்டியை டாலர் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப உயர்த்தப்போவதாக வெளியான அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினசரி வாடகையாக ஆயிரம் இரண்டாயிரம் வசூலிக்கும் விடுதிக் கட்டணங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
Comments