ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் அதனை பதிவு செய்ய வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆன்லைன் வகுப்புகளை இனி பள்ளி நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்யவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனிவரும் காலங்களில் ஆன்லைன் வகுப்புகளை அந்தந்த பள்ளி நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும், பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளும் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகளுக்கான முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட, பள்ளிக்கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குநர், சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், அந்த குழு கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கான பரிந்துரைகளை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோவில் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மாணவ, மாணவிகள் புகார்களை தெரிவிக்க உதவி எண்ணை உருவாக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வரும் புகார்களை சைபர் கிரைம் போலீசில் எஸ்பி நிலையில் உள்ள அதிகாரி உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Comments