பருப்பு, சமையல் எண்ணெய் கொள்முதல் டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை
பொது வழங்கல் திட்டத்துக்கு 20 ஆயிரம் டன் பருப்பு, 80 லட்சம் லிட்டர் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பொதுநல மனுவில், டெண்டர் அறிவிப்பில் முந்தைய நிபந்தனைகளைப் பின்பற்றாமல், புதிய நிபந்தனைகள் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏலத்தில் கலந்து கொள்ளும் நிறுவனம் கடைசி 3 ஆண்டுகளில் 71 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டியிருக்க வேண்டும் எனப் பழைய நிபந்தனை உள்ளதையும், கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் போதும் எனப் புதிய நிபந்தனைகளில் உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
டெண்டர் அறிவிப்பாணையில் உள்ள 14 விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள டெண்டருக்கு 30 நாள் காலக்கெடு வழங்க வேண்டும் என்றும், இந்த டெண்டர் அவசரமாக 6 நாளில் முடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் டெண்டரை ரத்து செய்து, முந்தைய நிபந்தனைகளின் படி புதிய அறிவிப்பு வெளியிட உத்தரவிடக் கோரியிருந்தார். மனு நீதிபதி வேலுமணி முன் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா சூழலில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவே அவசரக்கால டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், அதற்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் அரசு சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்தார்.
Comments