ஓட ஓட விரட்டி அடிக்கிறது இது தான்..! ஆக்கிரமிப்பை அகற்றியதால் ஆத்திரம்
கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்த மாநகராட்சி பொறியாளரை வீடுகளை இழந்தவர்கள் ஓட ஓட விரட்டி அடித்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது
ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள புகவான்கா கழிவுநீர் கால்வாய் பகுதியில் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். பலமுறை இங்குள்ள ஆக்கிரமிப்புகளை காலி செய்யச் சொல்லி மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியினர் காலி செய்ய மறுப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் கடப்பா மாநகராட்சி தலைமை பொறியாளர் ரகுநாத் ரெட்டி தலைமையில் சென்ற ஊழியர்கள் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள வீடுகளை மாநகராட்சி ஊழியர்கள் இடித்தனர். தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதை பார்த்து வீதியில் நின்று கதறிய பெண்கள், ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்து ஜேசிபியை முற்றுகையிட்டு ஓட்டுநரை விரட்டியதோடு, அங்கிருந்த பொறியாளர் ரகு நாத் ரெட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்த பொறியாளர் ரகு நாத் ரெட்டி காவல்துறையினரை அழைக்க செல்போனை எடுத்தார், கோபமடைந்த அப்பகுதி மக்கள் கற்கள், பலகைகள், கட்டைகளைக் கொண்டு அவர் மீது எறிந்து ஓட ஓட விரட்டி அடித்தனர்.
அங்கிருந்து தப்பித்து ஓடிய தலைமை பொறியாளர் ரகுநாத் ரெட்டி, கடப்பா முதலாவது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அத்து மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என போலீசாருக்கு மனு அளித்துள்ளார்.
கால்வாயின் நீர்வழிப்பாதையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வீடுகள் கட்ட ஆரம்பிக்கும் போது கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்துவிட்டு அது பலரது வாழ்விடமாக மாறிய பின்னர் திடீர் ஞானோதயம் வந்தது போல அதிகாரிகள் முன் அறிவிப்பின்றி இடிக்க நடவடிக்கை எடுப்பதால் இது போன்ற எதிர்தாக்குதலை சந்திக்கும் விபரீதம் அரங்கேறுகின்றது.
Comments