11,320 கன அடி நீர் திறப்பு..! தாமிரபரணியில் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து நொடிக்கு 11ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது.
வெப்பச் சலனம் காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக மயிலாடியில் 24 சென்டிமீட்டரும், இரணியலில் 19 சென்டிமீட்டரும், கொட்டாரத்தில் 17 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், குழித்துறை, நாகர்கோவில், சுருளக்கோடு ஆகிய இடங்களில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நொடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வருவதால், 11 ஆயிரத்து 320 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு அணையில் இருந்து 794 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பில் தடுப்புக் கம்பிகளை மூழ்கடித்து வெள்ளம் பாய்கிறது.
தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் வாழை, மரவள்ளி, நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி பேருராட்சி, பொதுப்பணித்துறை, காவல்துறை சார்பில் வாகனங்களில் சென்று ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஆறுகளிலும், கால்வாய்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்வதால் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளுக்காக முகாமிட்டுள்ளனர். பழையாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு பாய்வதால் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகர்கோவிலில் புத்தேரி குளம் நிரம்பி அருகிலுள்ள ஊர்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
கனமழையால் மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கன மழையால் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன.
முன்சிறை, பார்த்திவபுரம், மங்காடு ஆகிய ஊர்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஐம்பதுக்கு மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் குழித்துறை, விளவங்கோடு அரசு பள்ளிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் ஏ.வி.எம் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளச்சல், வாணியக்குடி, குறும்பனை உள்ளிட்ட ஊர்களில் இருநூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. குளச்சல் பெரிய பள்ளி வாசலுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பார்வையிட்டார்.
பழையாற்றில் வெள்ளப்பெருக்கால் நாகர்கோவிலில் இருந்து அருமநல்லூர், தடிக்காரன்கோணம் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி குளம் உடைந்ததால் 1400 ஏக்கர் பரப்பிலான விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
வெள்ளம் பாதித்த புத்தேரி, ஆசாரிப்பள்ளம் பகுதிகளில் மக்களவை உறுப்பினர் விஜயகுமார், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
Comments