மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பிஎஸ்பிபி பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக விசாரணை..!

0 5126
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. பிஎஸ்பிபி பள்ளி முதல்வரிடம் 2-வது நாளாக விசாரணை..!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பி.எஸ்.பி.பி.பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜனிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே மாணவிகள் புகாரளித்ததாக கூறப்படும் நிலையில், நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகள் விசாரணையில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மா ஷேசாத்ரி பால பவன் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன், மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். விசாரணையில், இந்த விவகாரத்தில் பத்ம ஷேசாத்ரி பள்ளியில் பணிபுரியும் மேலும் சில ஆசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், 5 ஆண்டுகளாக ராஜகோபாலன் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. ராஜகோபாலனின் பாலியல் அத்துமீறல் குறித்து ஏற்கனவே மாணவிகள் புகாரளித்தும் அவன் மீது பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரிக்க பி.எஸ்.பி.பி. பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரான இருவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜனிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தியாகராயநகர் துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலஷ்மி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் ஏற்கனவே புகாரளித்தும் கண்டுகொள்ளாதது ஏன்? என்பது தான் முதல்வர் கீதா கோவிந்தராஜனிடம் முன்வைக்கப்பட்ட பிரதான கேள்வி என்று கூறப்படுகிறது.

3 மணி நேர விசாரணைக்கு பிறகு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பி.எஸ்.பி.பி. பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜனிடம், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜகோபாலனுக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்பட்டதா? பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் கமிட்டியில் ராஜகோபாலனை நியமித்தது எப்படி? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். 

எல்லாவற்றுக்கும் மேலாக, பள்ளியில் நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கமிட்டியில் ராஜகோபாலன் உறுப்பினராக இடம்பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரையே, எப்படி கமிட்டியில் நியமிக்கலாம்? ராஜகோபாலன் கமிட்டியில் இருந்ததாலேயே அவன் மீதான குற்றச்சாட்டுகள் வேண்டுமென்றே விசாரிக்கப்படாமல் கைவிடப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், சமூக வலைதளங்கள் மூலம் ராஜகோபாலனின் பாலியல் அத்துமீறல்களை, ஆதாரங்களை வெளியிட்ட மாணவிகள் புகார் அளிக்க நேரில் வருவதற்கு அச்சப்பட்டு, துணை ஆணையர் ஜெயலஷ்மியின் வாட்ஸ் அப் மூலம் புகார்கள் அளித்துள்ளனர். அந்த வகையில் சுமார் 30மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

3 மணி நேர விசாரணைக்கு பிறகு காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பி.எஸ்.பி.பி. பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜனிடம், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜகோபாலனுக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்பட்டதா? பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் கமிட்டியில் ராஜகோபாலனை நியமித்தது எப்படி? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments