ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கியது யாஸ் புயல்
வங்கக் கடலில் உருவான யாஸ் அதிதீவிரப் புயல் யாஸ் வடக்கு ஒடிசாவில் தாம்ரா - பாலாசூர் இடையே கரையைக் கடந்து வருகிறது.
ஒடிசாவில் புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் தாம்ரா என்னுமிடத்தில் புயல் கரையைக் கடந்தபோது மரங்களை ஆட்டிப் படைத்ததுடன் வீடுகள், கட்டடங்களின் கூரைகளையும் பிய்த்தெறிந்தது.
புயலின் எதிரொலியாகக் கடலோரப் பகுதிகளில் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலம் மிதுனாப்பூர் மாவட்டத்தில் உள்ள திகாவில் அலைகள் சீற்றத்துடன் எழுந்ததால் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.
தாம்ரா - பாலாசூர் இடையே கரையைக் கடக்கும் புயல் பிற்பகல் வரை பாலசோர் மாவட்டத்தில் நிலவும் என்றும், அதன்பின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நுழையும் என்றும் ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார்.
புயலின் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்று முழுவதும் கனமழை நீடிக்கும் என்றும், ஜார்க்கண்டில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடந்தபோது ஒடிசாவின் தாம்ரா என்னுமிடத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் கடலோரப் பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன.
மேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்படும் எனக் கணித்த பகுதிகளில் மீட்புப் பணிக்குத் தயாராக ராணுவத்தின் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. புயல் கரையைக் கடந்த நேரத்தில் திகாவில் பலத்த மழை பெய்ததுடன் கடல்சீற்றத்துடன் காணப்பட்டது.கடல்நீர் ஊருக்குள் புகுந்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் 32 பேரை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
Comments