எதிர்ப்பை மீறி அணை கட்டும் கர்நாடகா? ஆய்வு செய்ய குழு அமைப்பு..!

0 4655
எதிர்ப்பை மீறி அணை கட்டும் கர்நாடகா? ஆய்வு செய்ய குழு அமைப்பு..!

காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைத்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா தலைநகர் பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் 9ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்ட கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் எடியூரப்பா அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால், காவிரி ஆற்றின் உபரி நீரை தமிழகம் பயன்படுத்தி கொள்ள முடியாத நிலை ஏற்படும். அதனால், ஆரம்பம் முதலே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இன்றியும், வன பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாமலும், மேகதாதுவில் அணை கட்ட கட்டுமானப் பொருட்களை கர்நாடகா குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. கர்நாடகா கட்டும் அணையால் 5ஆயிரத்து252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், வன விலங்குகள் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், தமிழக, கர்நாடக அரசுகளும் பதிலளிக்க உத்தரவிட்டது.

மேலும் மத்திய அரசின் அனுமதியின்றி மேகதாது பகுதியில் அணை கட்டப்படுகிறதா? அணை கட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் மூத்த அதிகாரி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த அதிகாரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு ஜூலை 5ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments