தீவிரப் புயலாக மாறி ஒடிசா- மேற்கு வங்கம் இடையே நாளை மதியம் கரையைக் கடக்கிறது யாஸ் புயல்

0 1817

வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் ஒடிசா- மேற்கு வங்கக் கடலோரப் பகுதியில் நாளை நண்பகல் அதிதீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 10 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் மேலும் வலுவடைந்து தீவிரப் புயலாக உருவெடுத்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாரதீப்பில் இருந்து 390 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் திகாவில் இருந்து 470 கிலோ மீட்டர் தொலைலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இன்று மாலை அதி தீவிரப்புயலாக உருப்பெற்று ஒடிசா, மேற்கு வங்கம் இடையே உள்ள பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு நடுவே நாளை மதியம் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது, மணிக்கு 165 முதல் 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாஸ் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம், சிக்கிம் மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயலை மீட்புப் பணிகளுக்காக கடற்படை, விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட அமைப்புகள் களமிறங்கியுள்ளன.

அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்புக் குழுவினரும் 3 மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைக்குமாறு அறிவுறுத்தினார்.

இதற்கிடையே ஒடிசாவில் 5 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் 10 லட்சம் பேரை முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புயல் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலங்கள் வழியாக இயக்கப்படும் 90 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. படகுகள் அனைத்தும் கரைக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments