சுட்டுக் கொன்று கட்சித்தாவும் தோழர் டான்..! ஒசூர் அட்ராசிட்டிஸ்

0 8999
சுட்டுக் கொன்று கட்சித்தாவும் தோழர் டான்..! ஒசூர் அட்ராசிட்டிஸ்

பெங்களூரில் ஜெயிக்கிற அரசியல் கட்சியில் இருந்து கொண்டு வில்லங்கமான இடங்களை கட்டப்பஞ்சாயத்து செய்து அபகரிக்கும் ரவுடிக் கும்பலுக்குள் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபர்  சுட்டுக் கொல்லப்பட்டார். தெலுங்குப் பட பாணியில் வீட்டுக்குள் இருந்தவரை வெளியில் இழுத்து வந்து குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுக் கொன்ற ஓசூர் டான் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ உடனடியாக அந்தக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தான் செய்யும் ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்துக்கு பிரச்சனை வராமல் பார்த்துகொள்பவர் ஓசூர் அடுத்த தளி தொகுதியைச் சேர்ந்த எதுபூசன ரெட்டி..! சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதாவில் இருந்தவர், திமுகவுக்கு தாவி அங்கிருந்து 15 நாட்களுக்கு முன்பு சிபிஐ கட்சியின் தோழராக தன்னை இணைத்துக் கொண்டார்

இவர் மீது பல்வேறு கொலை , ஆள்கடத்தல் மற்றும் நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் உள்ளூர் கட்சி பிரமுகர்களின் தயவால் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெல்லூர் கிராமத்திற்கு தன்னுடைய கூட்டாளி கஜாவுடன் சென்ற எதுபூஷன ரெட்டி அங்குள்ள ரியல் எஸ்டேட் அதிபரான லோகேஸ் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளான். பணம் தரமறுத்த அவரை தெலுங்குப்பட பாணியில் துப்பாக்கி முனையில் மிரட்டிப் பிடித்து இழுத்து வந்து தாங்கள் வந்த காரில் ஏற்றி அடித்து உதைத்துள்ளனர். லோகேஸின் குடும்பத்தினர் கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சியதால் அவரை விடுவித்துச்சென்றுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் லோகேஷ் வீட்டுக்குச் சென்ற எதுபூஷன ரெட்டி, மீண்டும் அவரைப் பிடித்து இழுத்து வந்து வீட்டிற்கு வெளியே வைத்து, தான் கேட்ட பணத்தை கொடுக்க மறுத்தால் இது தான் நடக்கும் என்று அவரது தலையின் பக்கவாட்டில் வைத்து இரண்டுமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

உடனடியாக லோகேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு லோகேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் எதுபூஷன ரெட்டி, கஜா ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எதுபூஷனரெட்டி, கஜா ஆகியோருடன் சேர்ந்து லோகேஷும் வில்லங்கமான சொத்துக்களை குறைந்தவிலைக்கு கட்டப்பஞ்சாயத்துப் பேசி முடித்து லட்சக்கணக்கில் சம்பாதித்ததாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அவர்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் எதுபூஷனரெட்டி, தனக்கு அவசரமாக 5 லட்சம் ரூபாய் வேண்டும் எனக்கேட்டு லோகேஷ் செல்போனில் மிரட்டி உள்ளான். ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த நிலையில் தான் வீடு புகுந்த இந்த கொடூரத் தாக்குதலை எதுபூஷன ரெட்டி நடத்தி இருப்பதாகக் கூறப்படுகின்றது.

தளி தமிழகத்திற்குள் இருந்தாலும், அங்கு பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் டான்கள் போல சர்வசாதாரணமாக கையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாகவும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினால் கர்நாடக மாநிலத்திற்குள் சென்று பதுங்கிக் கொள்வதாகவும் கூறப்படுகின்றது. காவல்துறை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே தமிழக பகுதிகளில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுவதை தடுக்க இயலும் என்கின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments