அரைகுறை ஆடையில் ஆன்லைன் வகுப்பு... பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்

0 13799
அரைகுறை ஆடையில் ஆன்லைன் வகுப்பு... பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பி.எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் பத்மேஷேசாத்ரி தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவன், பள்ளி மாணவிகளிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. படிக்கிற பிள்ளைகளை நாசமாக்கும் வேலைகளில் ஈடுபட்ட காமக்கொடூரன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....

சென்னை கே.கே.நகரில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தயார் உருவாக்கிய பத்ம சேஷாத்ரி பால பவன் என்ற சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு வணிகவியல் பிரிவில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவன், தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

மேலும் சில மாணவிகளிடம் செல்போன் எண்களை பெற்று அவர்களுக்கு வீடியோ கால் செய்வது போன்ற தொந்தரவுகளிலும் ராஜகோபால் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர், ராஜகோபாலின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் துணிச்சலுடன் பதிவிட்டார்.

அத்தோடு மாணவிகளிடம் ராஜகோபல் ஆபாசமாக பேசுவது, ஆபாசமாக நடந்து கொள்வது தொடர்பான வாட்ஸ்ஆப் சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்டுகளையும் அந்த மாணவி வெளியிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஊரடங்கு காலத்தில் நடந்த ஆன்லைன் வகுப்புகளில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு அரைகுறை ஆடையுடன் தோன்றியும் மாணவிகளை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளான். இந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதனை அடுத்து ராஜகோபாலால் தாங்களும் பாதிக்கப்பட்டதாக மேலும் சில மாணவிகளும் சமூக வலைதளங்களில் புகார்களை வெளியிட ஆரம்பித்தனர். கடந்த காலங்களில் கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பயின்ற மாணவிகளும் ராஜகோபாலால் தாங்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தங்கள் மோசமான அனுபவங்களை பகிர்ந்தனர். மேலும் பத்மஷேசாத்ரி பள்ளியில் பயின்ற பழைய மாணவர் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏற்கனவே ராஜகோபாலன் குறித்து அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றோர் தங்கள் ட்விட்டர் பக்கம் மூலம் வெளிப்படுத்தியதால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலஷ்மி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஆனால் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும், புகார் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுகப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து இதுவரை பாதிக்கப்பட்ட மாணவிகளோ, பெற்றோரோ நேரடியாக தங்களிடம் புகார் அளிக்கவில்லை என்றும், நிர்வாகமே தாமாக முன் வந்து எந்தவித சமரசமுமின்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாலியல் குற்றச்சாட்ட்டில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலனை சஸ்பெண்ட் செய்து பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலஷ்மி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து ராஜகோபாலனிடம் விசாரணை நடத்திய நிலையில், பள்ளி நிர்வாகம் அவனை சஸ்பெண்ட் செய்துள்ளது. சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதாவும் தொலைபேசி வாயிலாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார். நடந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க பள்ளி நிர்வாகத்துக்கு அவர் நோட்டீஸும் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் பாலியல் புகார் குறித்து பத்ம ஷேசாத்ரி பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் ராஜகோபாலனை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா என சக ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில் உரிய பதில் வழங்கப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாகவும் பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் அளித்த எழுத்துப்பூர்வ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் சர்ச்சை குறித்து, பாதிக்கப்பட்ட மாணவிகளும் பெற்றோர்களும் புகார் அளிக்க முன்வருமாறு, மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

புகார் கொடுக்கும் மாணவிகளின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என உறுதி கொடுத்துள்ள காவல்துறை, எவ்வித அச்சுறுத்தலும் வராது என்றும் உத்தரவாதம் அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலஷ்மி -ஐ 9444772222 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் பள்ளியில் பல மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஆதாரங்கள் வெளியாகி உள்ள நிலையில், காவல்துறை இந்த வேண்டுகோளை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலனின் செல்போன், லேப்-டாப் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்த காவல்துறை, சைபர் கிரைம் நிபுணர்கள் உதவியுடன் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்டெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments