மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி..! கொரோனா விருந்து பாவங்கள்

0 13360
மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி..! கொரோனா விருந்து பாவங்கள்

கும்பகோணம் அருகே ஊரடங்கு காலத்தில்  திருமணம் செய்து கொண்டு விதியைமிறி உறவினர்கள் புடை சூழ கறிவிருந்தில் பங்கேற்ற புதுமாப்பிள்ளை உள்ளிட்ட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முககவசம் மற்றும் சமூக இடைவெளியை மறந்த திருமண வீட்டாருக்கு மொய்யாக கிடைத்த கொரோனா குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கும்பகோணம் அடுத்த பாப நாசம் தாலுகா திருப்பாலத்துறை எஸ்.பி.ஜி மிஷன் தெருவை சேர்ந்த ராஜா என்பவர் தான் ஊரடங்கு காலத்தில் கறிவிருந்து வைத்து கொரோனாவை மொய்யாக பெற்ற புதுமாப்பிள்ளை...!

அனுமதியின்றி கடந்த 14 ந்தேதி உற்றார் உறவினரை கூட்டி திருமணம் விழாவை சீரும் சிறப்புமாக நடத்திய ராஜா, அதன் தொடர்ச்சியாக 17 ந்தேதி ஊரை கூட்டி கறிவிருந்து வைத்தார். உறவினர்கள் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் கூடி கறிவிருந்து உண்டு மகிழ்ந்தனர்.

இதில் பங்கேற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக இருமல் காய்சல் என்று ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றதாக கூறப்படுகின்றது. கறிவிருந்து தகவல் தெரியவந்ததையடுத்து மாப்பிள்ளை வீட்டார் 60 பேருக்கு முதல் கட்டமாக சுகாதாரத்துறையினர் பரிசோதனை நடத்தியதில் புது மாப்பிள்ளை ராஜா உள்பட 18 பேருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பதும் அவர்களில் சிலர் பாராசிட்டமல் மாத்திரைகளை சாப்பிட்டு சமாளித்து வந்ததும் தெரியவந்தது.

திருமணம் முடிந்த மறுவாரமே மாப்பிள்ளையிடம் இருந்து புதுப்பெண்ணை பிரித்த உறவினர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். கறிவிருந்தால் கொரோனாவை மொய்யாக பெற்ற மாப்பிள்ளை வீட்டார் 18 பேரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அன்னை கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது போன்ற தொரு விபரீதம் நடந்து விடக்கூடாது என்று தான் அரசு ஊரடங்கை அமல்படுத்துவதோடு திருமணம் விழாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றது .

இதே போல கபிஸ்தலம் பகுதியில் உள்ள அண்ணா காலனியில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அந்தப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள் பார்ட்டி , கறிவிருந்து என்று கூட்டத்தை கூட்டும் பொறுப்பற்ற நபர்களால் சமூகத்தில் கொரோனா பெருந்தொற்றின் பரவல் அதிகரிக்க காரணமாகி விடுகின்றது என்கின்றனர் அதிகாரிகள். பார்ட்டி விருந்து வைப்போரை கண்காணிக்காமல் கோட்டை விடும் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இந்த தவறுகளுக்கு ஒரு வகையில் காரணமாகிவிடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments