4 மணி நேரமாக ஆம்புலன்சில் தவித்து.. உயிர் பிரிந்த சோகம்..! ஆக்ஸிஜன் படுக்கை பற்றாக்குறை விபரீதம்
கிருஷ்ணகிரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 34 வயதே ஆன கொரோனா நோயாளியை தனியார் மருத்துவமனை கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல், 4 மணி நேரமாக ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் மூச்சுத்திணரும் அவலம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
தமிழகத்தில் கொரோனாவின் வீச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியாவோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகின்றது. கிருஷ்ணகிரியில் 7444 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1438 படுக்கைகளில் மட்டுமே ஆக்ஸிஜன் வசதி உள்ளது. இதனால் ஆக்ஸிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராஜாஜி நகரை சேர்ந்த பிரேம் குமார் என்ற 34 வயதான இளைஞர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஆக்சிஜன் வழங்க இயலாத நிலை ஏற்பட்டதால் ஆம்புலன்சில் ஏற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காலை 8 மணியில் இருந்து ஆக்சிஜன் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்த பிரேம் குமார் கொரோனாவின் கொடிய தாக்கத்தால் மூச்சுவிட இயலாமல் தவித்து வந்தார்
அவரது உறவினர்களும் அரசு மருத்துவமனையில் ஒரு படுக்கையாவது கிடைத்து விடாதா ? பிரேம்குமாரின் உயிரை காபாற்றி விடமட்டோமா ? என்ற ஏக்கத்துடன் காத்திருந்தனர். ஆனால் ஏற்கனவே அவர்களை போல ஏராளமானோர் ஆக்சிஜன் படுக்கைக்கு காத்திருந்ததால் பிரேம் குமாருக்கு படுக்கை கிடைக்கவில்லை
இந்த நிலையில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் தீர்த்து விட்டதால் கடுமையான ஜீவ மரண போராட்டத்தை சந்தித்த இளைஞர் பிரேம்குமார் ஆம்புலன்சிலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்
பிரேம்குமாரின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என்று அவரது உறவினர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணானதால் கடும் மன உளைச்சல் அடைந்தனர்
பிரேம்குமார் மட்டுமல்ல பல நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் மூச்சுத்திணறி பலியாவதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதி அமைத்துக் கொடுக்க சுகாதாரதுறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments