நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் கார் ஏற்றிக் கொலை..? அமெரிக்க மாப்பிள்ளை மீது புகார்

0 15146
திருவாரூர் அருகே தபால் நிலையத்தில் பணி புரிந்துவந்த நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப்பெண் ஒருவர், கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க மாப்பிள்ளைக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியவருக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து விரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருவாரூர் அருகே தபால் நிலையத்தில் பணி புரிந்துவந்த  நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப்பெண் ஒருவர், கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க மாப்பிள்ளைக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியவருக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து விரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திருவாரூர் அருகே கிடாரங் கொண்டான் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ஜெயபாரதி, நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர், ஜெயபாரத்திக்கும், கும்பகோணத்தை சேர்ந்த அமெரிக்க மாப்பிள்ளை விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015- ல் திருமணம் நடைபெற்றது.

அமெரிக்காவின் வெர்ஜினியாவில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன் மனைவி ஜெயபாரதியை குழந்தையுடன், விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் இருந்து திருவாரூரில் உள்ள தாய் வீட்டுக்கு திருப்பி அனுப்பியதாக கூறபடுகின்றது.

தாய் வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதிக்கு அஞ்சல் துறையில் தற்காலிக கிளார்க் வேலை கிடைத்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பணிக்கு சென்று விட்டு தனது மொப்பட்டில் வீடு திரும்பிய ஜெயபாரதி மீது ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப செல்லும் வாகனம் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் ஜெயபாரதியின் சகோதரரிடம் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. விபத்தை ஏற்படுத்தியவர்கள் ஜெயபாரதியின் மீது திட்டமிட்டு மோதியது போல இருந்ததாகவும், மோதிய வேகத்தில் அவரது உடல் மரத்துடன் வைத்து நசுக்கி கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்த போது சம்பவத்திற்கு இரு தினங்கள் முன்பாக விபத்துக்கு காரணமான வாகனத்தை கும்பகோணம் அருகே படீஸ்வரத்தை சேர்ந்த இருவர் விலை கொடுத்து வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்தோடில்லாமல் காலையில் ஜெயபாரதி பணிக்கு செல்லும் போது அவரை பின் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் சென்ற சிசிடிவி காட்சியும் கைபற்றப்பட்டது. இது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் போலீசார் விசாரிக்க மறுத்த நிலையில் இந்த சம்பவம் குறித்து உறவினரும் நடிகருமான சந்தானத்திடம் தகவல் தெரிவித்து உதவி கேட்டுள்ளனர்.

சந்தானம் தனது அரசியல் செல்வாக்குள்ள நண்பர் மூலம் காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விபத்தாக பதிவு செய்த வழக்கை மீண்டும் மறு விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயபாரதி அண்மையில் அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கும் அவர் பணிபுரிகின்ற அலுவலகத்திற்கும், புகார்களுடன் கூடிய விவாகரத்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பிவைத்ததாக கூறப்படுகின்றது. இந்த நோட்டீசால் அவர் பார்த்து வரும் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நோட்டீஸை வாபஸ் பெறுமாறு கணவர் விஷ்ணுபிரகாஷ் குடும்பத்தினர் ஜெயபாரதியை கடுமையாக மிரட்டியதாகவும், ஆனால் ஜெயபாரதி நோட்டீஸை வாபஸ் பெற மறுத்து விட்டதால் உண்டான ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி ஜெயபாரதியை கார் ஏற்றி கொலை செய்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மையை முழுமையாக வெளிக் கொண்டுவர வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments