அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 கோடி ரூபாய் மோசடி? முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மீது புகார்
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 6 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீது அவரின் உதவியாளராக இருந்தவர் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பிரகாசம். வயது 47. இவர் அதிமுக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபிலிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பிரகாசம் டி.ஜி.பி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களான ஜாபர், இத்திரிஸ் கபில், முகமது காசிப் மற்றும் வாகித் ஆகிய 4 பேர் மீது பண மோசடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரில், நிலோபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியபோது, தனது தொழிலாளர் நலத்துறையிலும், வக்பு வாரியத்திலும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 105 நபர்களிடம் 6 கோடியே 62 லட்சத்து 36 ஆயிரம் பணம் பெற்றுள்ளார் எனவும், பணம் அளிக்க வந்தவர்களிடம் அந்த பணத்தை உதவியாளராக இருந்த தன்னிடம் நேரடியாகக் கொடுக்கச் சொல்லியும், தனது வங்கி கணக்கில் செலுத்தச் சொல்லியும், காசோலையாகவும் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பணத்தை தன் வங்கிக் கணக்கில் பெற்றபின் அந்த பணத்தை முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் உத்தரவின் பேரிலும், அவர்களின் நெருங்கிய உறவினர்களான ஜாபர், இத்திரிஸ் கபில், முகமது காசிப் மற்றும் வாகித் ஆகிய 4 பேரின் உத்தரவின் பேரிலும் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி மாற்றி செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பணம் பெற்றபின் கொரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி சொன்னபடி வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமலும் அமைச்சரும் அவர்களின் உறவினர்கள் 4 பேரும் அலைக்கழித்து வந்தாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், வேலை வேண்டாம் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பித் தரும்படி கேட்டவர்களிடம் தேர்தல் நெருங்குகிறது என்றும் அடுத்த முறையும் நானே அமைச்சராக வருவேன் என்றும், அப்போது சொன்னபடி வேலையைப் பெற்றுத் தருகிறேன் என்றும் சமாதானம் செய்து, தன் மீது நம்பிக்கை இல்லை என்றால் கொடுத்த பணத்திற்கான காசோலையை தனது உதவியாளரிடம் பெற்றுக்கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் தன்னை அழைத்து தன் பெயரிலும், தனது மனைவி பெயரிலும் உள்ள காசோலையை கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டதன் பேரில், பணம் கொடுத்தவர்களிடம் அவர்கள் கொடுத்த பணத்திற்கு ஈடாக தனது பெயரிலும், தனது மனைவியின் பெயரிலும் உள்ள காசோலையை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலுக்கு இந்த தேர்தலில் இடமில்லை என்ற அறிவிப்பு வெளிவந்தபின் காசோலையைப் பெற்றவர்கள் அமைச்சர் மீதுமட்டுமல்லாமல் தன் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்தும், நேரடியாக பணம் கேட்டு தன்னையும் தன் குடும்பத்தாரையும் தொந்தரவு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், புகாரில் அமைச்சரிடம் பணம் கொடுத்த 105 நபர்களின் பெயர்களையும், அவர்கள் கொடுத்த பணத்தையும் குறிப்பிட்டுள்ள பிரகாசம், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணம் கொடுத்தவர்களை மோசடி செய்து அவர்கள் அளித்த 6 கோடி ரூபாயில் இங்கிலாந்தில் உள்ள தனது மூத்த மகள் நர்ஜீஸ் பெயரில் சொத்து வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களிடம் அவர்களின் பணத்தை திருப்பி ஒப்படைக்கும்படியும், நம்பிக்கை கொடுத்து மக்களை ஏமாற்றி 6 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடுபத்தார் 4 பேர் மீதும் உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும், தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் புகாரில் பிரகாசம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சிக்கும் கட்சியின் மாண்பிற்கும் களங்கம் விளைவித்ததாகக் கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments