அரிதாக பிறந்த இரட்டையர்கள் விஜய், சுஜய்க்கு வயது 50... காட்டு யானையுடன் மோதி ஒரு தந்தத்தை இழந்தாலும் கம்பீரம் குறையாத சுஜய்!

0 6981
அஜய், தந்தம் உடைந்த நிலையில் சுஜய் மற்றும் குட்டியாக தாய் தேவகியுடன்....

யானைகள் அரிதாகவே இரண்டு குட்டிகளை ஈனும். அந்த வகையில், முதுமலையில் பிறந்த இரட்டையர்களான 'விஜய்' மற்றும் 'சுஜய்' யானைகள் தங்கள் 50-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளன.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. ஆசியாவிலேயே பெரிய யானைகள் வளர்ப்பு முகாம் இதுதான். வனத்தில் தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டிகள் மீட்கப்பட்டு இங்கு பராமரிக்கப்படுகின்றன. ஊருக்குள் புகுந்து சொல்பேச்சு கேட்காமல் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு கும்கி யானைகளாக மாற்றப்படுகின்றன.

தற்போது முதுமவையில் 27 வளர்ப்பு யானைகளை வசிக்கின்றன. இவற்றில், வயது முதிர்ந்த பாமா', 'இந்தர்', 'அண்ணா' ஆகிய யானைகளுக்கு 60 வயது ஆனதால், அவற்றுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற இந்த யானைகள் எந்த பணியிலும் ஈடுபடுத்தப்படாது. அரசு ஊழியர்களாக கருதப்படும் இந்த யானைகளுக்கு ஓய்வூதியமும் உண்டு.

'மூர்த்தி' எனும் தந்தமில்லாத ஆண்யானையான 'மக்னா' யானை கேரளாவில் 17 பேரைக் கொன்றது. இந்த யானையை சுட்டுக்கொல்ல கேரள வனத்துறை உத்தரவிட்டது. ஆனால், முதுமலை வனச்சரணாலயக் காப்பாளராக இருந்த உதயன் தலைமையில் வனத்துறையினர், யானையைப் பிடித்து முதுமலை கொண்டு வந்தனர். பின்னர், கரோலில் அடைத்து அதை சாந்தப்படுத்தினர். தற்போது, 'மூர்த்தி' எனப் பெயர் சூட்டப்பட்டு இந்த யானை முதுமலையில் சாந்தமாக வாழ்ந்து வருகிறது.

முதுமலை யானைகள் முகாமில் வசிக்கும் விஜய், சுஜய் என்ற யானைகளுக்கு சிறப்பு வரலாறு உண்டு. முதுமலை முகாமில் தேவகி என்ற யானை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த செல்லக்குட்டிகள்தான் விஜய், சுஜய். கடந்த 1971 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதி தேவகி இந்த இரு ஆண் குட்டிகளை பெற்றெடுத்தது. பெண் யானைகள் பொதுவாக ஒரு குட்டியைதான் ஈனும். அரிதிலும் அரிதாக யானைகளிலும் இரட்டை குட்டிகளை ஈனும். அப்படி, பிறந்தவர்கள்தான் விஜயும் சுஜயும். இவற்றுக்கு விஜய், சுஜய் என்று பெயரிட்டு வனத்துறையினர் வளர்த்து வந்தனர். முதுமலை யானைகள் முகாமில் மிகச்சிறந்த கும்கி யானைகளாக இவை வலம் வந்தன. முதுமலையில் மற்ற யானைகளை காட்டிலும் சகோதரர்களான இந்த இரு யானைகளும் ஒன்றுக்கொன்று கூடுதல் பாசத்துடன் இருப்பதாக் சொல்கிறார்கள்.

கடந்த 2017-ம் ஆண்டு கோவை சாடிவயல் முகாமில் மதம் பிடித்த நிலையில் சுஜய் யானை கட்டி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, மதம் பிடித்த நிலையில் முகாமுக்குள் புகுந்த மற்றோரு காட்டு யானையுடன் சுஜய் சண்டையிட்டது. இரண்டுக்கும் நடந்த சண்டையில் சுஜய் யானையின் தந்தம் வேறுடன் முறிந்து விட்டது. இதனால், ஒற்றை தந்தத்துடன் வாழ வேண்டிய சூழல் சுஜய்க்கு உருவானது. ஒற்றை தந்தத்துடன் கும்கி பணியில் ஈடுபட முடியாது என்பதால் அதற்கு பிறகு , யானைகளை பிடிக்கும் பணியில் சுஜய் ஈடுபடுத்தப்படவில்லை. சாடிவயலில் இருந்து தான் பிறந்த வீடான முதுமலை திரும்பி அமைதியாக வாழ்ந்து வருகிறது சுஜய். கோவை சுற்றுவட்டாரத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட மதுக்கரை மகாராஜ், 'சின்னதம்பி' மற்றும் 'சங்கர்' ஆகிய யானைகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த நிலையில், விஜயும், சுஜயும் நேற்று முதுமலையில் 50 வது வயதை பூர்த்தி செய்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments