இடியாப்பம் மீது கொலைப்பழி..! வெண்டிலேட்டர் நோயாளிக்கு நேர்ந்த சோகம்

0 9417

கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் முககவசத்தை மருத்துவர் பறித்துச்சென்றதால் கணவர் இறந்துவிட்டதாக கூறி பெண் ஒருவர் கதறி அழுத நிலையில், கணவருக்கு அந்த பெண் கொடுத்த இடியாப்பம்தான், உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக  மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுவருவதால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தினமும் 10க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி பலியாகி வருகின்றனர்.

மருத்துவர் முககவசத்தை எடுக்கும் போது இடியாப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ராஜாவுக்கு அடுத்த சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இணைக்கும் வெண்டிலேட்டர் மற்றும் முககவசம் இல்லாததால் செய்வதறியாது திகைத்த அவரது மனைவி கயல்விழி, உதவிக்கு மருத்துவர்களை அழைத்துள்ளார் ஆனால் எவரும் உதவிக்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது.

அதற்குள்ளாக ராஜா மூச்சுத்திணறி பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தனது கணவனை அரசு மருத்துவர் அலட்சியத்தால் ஆக்ஸிஜன் முககவசத்தை பறித்துச்சென்று கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டிய அவரது மனைவி கதறி அழுதார்

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட போது, ராஜா ஓரளவு குணமடைந்து இருந்த நிலையில் அவரது மனைவி இடியாப்பம் உணவு ஊட்டிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவி தேவைப்படாமல் கழட்டி வைத்திருந்ததால், அவருக்கு அது தேவையில்லை எனக் கருதி மற்றொரு நோயாளிக்கு எடுத்துச்சென்றதாகவும், ராஜா திட உணவான இடியாப்பத்தை மென்று சாப்பிட்டு விழுங்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும், வெண்டிலேட்டர் பயன்படுத்தும் நோயாளிகள், திரவவகை உணவுகளையோ அல்லது கஞ்சி கூல் போன்ற எளிதாக விழுங்கக்கூடிய உணவுகளையோ எடுத்துக் கொண்டால் இது போன்ற மூச்சுத்திணறல் விபரீதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று விளக்கம் அளித்தனர்.

இதற்கிடையே தனது கணவர் மரணத்திற்கு நீதிகிடைக்கும் வரை சடலத்தை எடுக்க விடமாட்டேன் என்று கூறி கயல்விழி 3 மணி நேரத்திற்கும் மேலாக சடலத்துடன் தர்ணா போரட்டத்திலும் ஈடுபட்டார்

உண்மையில் ராஜா, இடியாப்பம் சாப்பிட்டு உயிரிழக்க வாய்ப்பில்லை என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவர் தவறிழைத்திருந்தால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பர்ப்பு.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments