7 பேர் விடுதலை-குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை உடனடியாக ஏற்று ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2018-இல் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளதாக கூறி, ஆளுநர் அந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றமே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சிறையிலுள்ள கூட்ட நெரிசலை தடுக்க கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று, உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்ய குடியரசுத்தலைவர் ஆணை பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எழுதிய கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேரில் வழங்கியுள்ளார்.
Comments