நிரம்பிய மருத்துவமனைகள்... மாற்று ஏற்பாடுகள் தீவிரம்

0 2949

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலுள்ள  படுக்கைகள் முழுவதுமாக நிரம்பின. இதனால் புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாற்று ஏற்பாடுகளுக்கான வேலைகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 400க்கும் மேற்பட்ட படுக்கைகளும் முழுவதுமாக நிரம்பியதால், ஒரே படுக்கையில் இரண்டு நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளாது.

60% முதல் 80% குணமடைந்தவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டாலும் அவர்கள் உயிர் பயத்தினால் வீட்டுக்கு செல்ல மறுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நோயாளிகள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தங்களால் சிறப்பான சிகிச்சையை வழங்கமுடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளும் நிரம்பியதால் 500 படுக்கைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. விரைவில் இந்த புதிய கட்டடம் திறக்கப்பட்டு, நோயாளிகளுக்கு அங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தமுள்ள 200 ஆக்சிஜன் படுக்கைகளும் முழுவதுமான நிரம்பியதால், மாவட்டம் முழுவதுமுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 முதல் 20 படுக்கைகள் அமைக்கும்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதேபோல் திருவள்ளூரிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 54 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதலாக 50 படுக்கைகள் அமைக்கப்படவிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் வளாகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நாமக்கலில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் முழுவதுமாக நிரம்பியதால், நகராட்சி திருமண மண்டபம் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள 350 ஆக்சிஜன் படுக்கைகளில் 300 படுக்கைகள் நிரம்பியதால், முதுகளத்தூர், கமுதி ஆரம்ப சுகாதார மையங்கள், சேதுபதி அரசு கலைகல்லூரி மற்றும் பரமக்குடி மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தேவைப்படும் பட்சத்தில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரமடைந்துவருவதால் மாவட்ட நிர்வாகம்  27 குழுக்கள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 370 படுக்கைகளும் நிரம்பியவுள்ள சூழலில், 270 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டத்தை விரைவில் திறக்கவேண்டுமென நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் அமரவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எழிச்சூர் அரசு காப்பகம், அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கேர் மையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 375 ஆக்சிஜன் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பியதால், பழைய அரசு மருத்துவமனை வளாகம், அரசு கலைக் கல்லூரி, புலியூர் தனியார் பொறியியல் கல்லூரி வளாகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் விடுதிகளில் கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த மையங்களில் வரும் 25 ஆம் தேதி முதல் சிகிச்சை அளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments