அள்ளிக் கொடுத்த போலீஸ் தம்பதி.. பசியாற்றும் சேவை..!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே போலீஸ் ஏட்டு தம்பதியர் தங்கள் மாத ஊதியம் மற்றும் சேமிப்பில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து ஆதரவற்ற முதியோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறிகளை வாங்கிக் கொடுத்து உதவியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் சரகத்துக்கு உள்ளிட்ட விளாம்பட்டி காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக உள்ள செல்வரத்தினமும், அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ள அன்பழகன் ஆகிய இருவரும் தான் ஆதரவற்றோரின் பசியாற்ற உதவிய போலீஸ் தம்பதியர்...
இவர்கள் இருவரும் தங்கள் மாத ஊதியம் மற்றும் சேமிப்பில் இருந்து சிறிய தொகையை எடுத்து தங்கள் பகுதியில் செயல்பட்டுவரும் ஆதரவற்ற முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ளவர்களுக்கு ஒரு மாதம் உணவளிக்க முடிவு செய்தனர். அதன் படி அந்த காப்பகத்திற்கு தேவையான 25 கிலோ எடை கொண்ட 10 மூட்டை அரிசி, பருப்பு , சர்க்கரை, மசாலா பொருட்கள், காய்கறிகள் வாழைபழங்கள் போன்றவற்றை லோடு வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்று வழங்கினர்
மனவளர்ச்சிக்குன்றியோர் பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவ மாணவியருக்கு முககவசங்களை வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
இருப்பவர் இல்லாதோருக்கு கொடுக்க வேண்டும் என்ற மனிதாபிமானத்துடுன் நடந்து கொண்ட போலீஸ் தம்பதியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. அதே நேரத்தில் கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கால் தங்கள் இல்லத்துக்கு பிறந்த நாளில் தேடிவந்து உதவும் உள்ளங்கள் வெளியில் வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் இல்ல முதியோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு உதவி தேவைப்படுவதாக கூறியதும் போலீஸ் தம்பதியர் ஒருமாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கியதாக தெரிவித்த அந்த இல்ல நிர்வாகி ஏஞ்சல், இவர்களை போல மனித நேயம் கொண்டவர்கள் தாமாக முன்வந்து உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பதை இல்லாதோருக்கு கொடுப்பதில் தானே இன்பம் இருக்கின்றது என்பதை உணர்ந்த உன்னத மனிதர்கள் உலகில் உள்ளவரை எவர் ஒருவரும் பசியோடு உறங்க செல்லவேண்டியதில்லை..!
Comments