இனிப்பு குவார்ட்டர் தயாரித்து போலீசில் சிக்கிய குடிமகன்ஸ்..! 230 ரூபாய் கொடுத்து ஏமாந்த குடிகாரர்ஸ்..!
கடலூரில் மருத்துவபயன்பாட்டிற்கு என்று மொத்தமாக சானிடைசர் கேன்களை வாங்கி அதில் எத்தனால் கலந்து எக்ஸ்பிரஸ் மதுபானம் தயாரித்து விற்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சானிடைசர் வாசனையை நீக்க கலக்கப்பட்ட கலர் ரசாயணத்தால் குவார்ட்டர் இனிப்பு மருந்தாகி, கேடிகளை போலீசில் சிக்க வைத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...'
தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் எக்ஸ்பிரஸ் பிராந்தி என்ற மதுப்பாட்டிலுடன் சுற்றிய குடிமகன் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்த போது , தான் 230 ரூபாய் கொடுத்து பாண்டிச்சேரி சரக்கு வாங்கி குடித்ததாகவும் போதை ஏறுவதற்கு பதிலாக , அது இருமல் மருந்து போல இனிப்பாக இருப்பதாக கூறி அந்த குடிகாரர் வேதனை தெரிவித்தார்.
குடிமகன் இனிப்பு குவார்ட்டர் வாங்கிய இடத்தை அடையாளம் காட்ட அங்கிருந்த ஒருவரை மடக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் அகரம் ஊராட்சி அடுத்த இராம நாதன் குப்பத்தில் உள்ள உத்திராபதி என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு குடிசை தொழில் போல சானிடைசரில் இருந்து போலியான மதுபானங்கள் தயாரிப்பதை கண்டுபிடித்தனர்.
அங்கிருந்த முல் ஓடை அன்பு என்பவரை பிடித்து விசாரித்த போது தான் புதுச்சேரியில் உள்ள போலி மது ஆலை ஒன்றில் வேலைபார்த்ததாகவும், அதே பாணியில் மருத்துவ பயன்பாட்டிற்கு என்று மொத்தமாக ஹாண்ட் சானிடைசரை வாங்கி, அதனுடன் எத்தனால் மற்றும் கலர் ரசாயணம் மற்றும் தண்ணீர் கலந்து குவார்ட்டர் மதுபானம் தயாரித்ததாகவும், தனது தயாரிப்பில், சானிடைசர் வாடையை குறைக்கவும், பிராந்தியின் நிறத்துக்காகவும் சேர்க்கப்பட்ட கலர் ரசாயணம் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டுவிட்டதால், டெக்னிக்கல் பால்ட்டாகி பிராந்தி இருமல் மருந்து போல இனிப்பாகி விட்டதாகவும் விளக்கம் அளித்து போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளான்.
அந்த வீட்டில் இருந்து 3000 பாட்டில் போலி ரசாயண இனிப்பு மதுவையும், சானிடைசர் கேன்களையும், எத்தனால், காலி பாட்டில்கள், மூடிகள் பிரபல மது நிறுவனங்களின் போலி லேபிள்களையும் போலீசார் கைப்பற்றினர். மதுபாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா ஏஸ் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வகையான போலி ரசாயண மதுவை வாங்கி குடிப்பதால் வயிற்றுகோளாறுகள் ஏற்படுவதோடு, அதிகமாக அருந்தினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண்பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை தகவலை வெளியிட்டனர்.
போலி மதுபான ஆலை நடத்திய உத்திராபதி, முல் ஓடை அன்பு உள்ளிட்ட 6 பேரை கைது செய்த காவல்துறையினர் இது போல வேறு எங்காவது போலி மதுபானம் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றதா ? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Comments